லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு ; விமானச் சக்கரத்தில் இருந்த சடலம்; பொலிஸார் தீவிர விசாரணை
பிரித்தானியாவின் லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்றின் சக்கரப் பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மொராக்கோவின் தாங்கியர் (Tangier) நகரிலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த Air Arabia Maroc நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானம் தரையிறங்கிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, சக்கரப் பகுதியில் சடலம் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து அவசர மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
லண்டன் கேட்விக் விமான நிலைய அவசர சேவைப் பிரிவினரும் சசெக்ஸ் பொலிஸாரும் இணைந்து சடலத்தை மீட்டதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் நோக்கில் விமானத்தின் சக்கரப் பகுதியில் மறைந்து பயணிக்க முயன்ற நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் மரணத்திற்கான துல்லியமான காரணம் குறித்து விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விமானங்களின் சக்கரப் பகுதியில் மறைந்து பயணிக்க முயலும் சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளதுடன், அவை உயிருக்கு மிகுந்த ஆபத்தானவை என விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.