நடுக்கடலில் விபத்துக்குள்ளான படகு: 11 அகதிகளுக்கு நேர்ந்த சோகம்!
ஹைதி நாட்டை சேர்ந்த பலர் அமெரிக்க நோக்கி புறப்பட நிலையில் அவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளதில் 11 பேர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த படகு கரீபியன் தீவான போர்ட்டோ ரிகோ அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இதனிடையே போர்ட்டோ ரிகோ தீவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஹெலிகாப்டர் ஒன்று கடலில் படகு கவிழ்ந்து கிடப்பதை கண்டது.
அதை தொடர்ந்து, இது குறித்து அமெரிக்க கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் கடலோர காவல்படையினர் மீட்பு படகுகளில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் பெண்கள், சிறுவர்கள் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதே சமயம் நீரில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 31 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். அனைவரும் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே படகில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது உறுதி செய்யப்படாத நிலையில், இந்த விபத்தில் மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.