பிகினி அணிய தடையா? அறுகம் குடாவில் முளைத்த புதிய பிரச்சினை!
நாட்டின் சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து பல்வேறு போலிச் செய்திகள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிரான நாசகார வேலைகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வெலிகம மற்றும் அறுகம் குடா (Arugam Bay) பகுதிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இரண்டு சம்பவங்கள் மூலம் இது தெளிவாகிறது.
இன பதற்றம்
முதல் சம்பவம் வெலிகமவில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் தாக்கப்படும் காணொளியாகும்.
இரண்டாவது சம்பவம் அறுகம் குடா பகுதியில் பொது இடங்களில் சுற்றுலாப் பயணிகள் ”பிகினி” அணிவதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் அப்பகுதியில் இன பதற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி என கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை உட்பட முக்கிய உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க முஸ்லிம் சமூகத்துடன் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வரும் நேரத்தில், அறுகம் குடா தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
"இது தொடர்பாக நாங்கள் அறுகம் குடாவிலுள்ள முஸ்லிம் சமூகத்தினரிடம் விசாரணை செய்தோம். பொது இடத்தில் நிர்வாணமாக ஒருவர் நடந்து சென்றதாகவும், அதற்கு அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.
அரசாங்கம் தனது அதிகாரத்தை வலுப்படுத்த செயற்பட்டு வரும் வேளையில், அப்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சில நபர்கள் அல்லது குழுவினரால் மறைமுக நோக்கத்துடன் செயற்படுத்தப்பட்ட விடயமாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்.
இனங்களுக்கிடையில் பதற்றங்களை ஏற்படுத்தவும், தேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான அதன் முயற்சிகளை சீர்குலைக்கவும் சிலர் மேற்கொண்ட முயற்சிகளாகவே அரசாங்கம் இந்தச் சம்பவங்களைக் கருதுகிறது.
சுற்றுலாத் துறையை இலக்கு வைத்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கோ அல்லது குழுவிற்கோ எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற போலி செய்திகளுக்கு பலியாக வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.