4 லட்சம் விருந்தினர்கள், 150 வகை உணவுகள்;உலகை வியக்க வைத்த திருமணம்
இந்தியா பிஹாரில், பல கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஒரு மக்கள் பிரதிநிதி நடத்திய இந்த ஆடம்பரத் திருமணம், சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நவம்பர் 25-ம் தேதி நடைபெற்ற ஷிவாங்கி - ரிஷிகேஷ் குமார் திருமண விழாவில் லட்சக்கணக்கான விருந்தினர்கள், குதிரைப் பந்தயம், பிரம்மாண்ட விருந்து, சொகுசு கார்கள், ஹெலிபேடுகள் எனத் திருவிழா கோலம் பூண்டிருந்தது.
ஏழ்மையான மாநிலத்தில் 4,00,000 பேருக்கு விருந்தளித்த அரசியல்வாதி
இந்தியாவின் ஏழ்மையான மாநிலத்தில் 4,00,000 விருந்தினர்களுக்கு விருந்தளித்த அரசியல்வாதி என்ற தலைப்பிலும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
6.2 ஏக்கர் பரப்பளவில் ஜெய்ப்பூர் அரண்மனை பாணியிலான பந்தல், பிரம்மாண்ட மேடை மற்றும் வெளிநாட்டு மலர்களால் விழா அரங்கம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 5 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
500 சமையல்காரர்கள், 300-க்கும் மேற்பட்ட சமையல் கூடங்களில் 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகளைத் தயாரித்திருந்தனர்.
பிஹார், உ.பி. ராஜஸ்தான் மற்றும் டெல்லியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்ற பந்தயத்தில் முதல் பரிசாக ‘தார்’ ஜீப்பும், அடுத்தடுத்த பரிசுகளாக பைக் மற்றும் ஸ்கூட்டரும் அறிவிக்கப்பட்டன.
இந்த ஆடம்பரத் திருமணம் ‘அரச குடும்பத் திருமணம்’ என வர்ணிக்கப்படுகிறது.