பைடன் நிருவகத்தின் அதிரடி முடிவு: நன்மை அடையவுள்ள வெளிநாட்டவர்கள்!
அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் நிரந்தரமாக குடியேறுவற்கான 'கிரீன் கார்டு' பெறுவதற்காக, பாராளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.
அமெரிக்காவில் ஆண்டு தோறும் வெளிநாட்டவர்கள் பலர், பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குடியேறுகின்றனர். இந்தியர்கள் வருகை தான் அதிகமாக உள்ளது.
அமெரிக்காவில் நிரந்தர மாக குடியேற வேண்டுமானால் கிரீன் கார்டு பெற வேண்டும். அதனால் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் ஆண்டு தோறும் 1.4 லட்சம் கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்தியர்களுக்கு பல்வேறு காரணங்களால் கிரீன் கார்டு பெறுவது சிக்கலாக உள்ளது. இந்நிலையில் கிரீன் கார்டு வழங்குவது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் குடியேற்ற சட்ட நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது,
அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற்றம் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்காக புதிய மசோதா விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்ட பின் கிரீன் கார்டு பெறுவதில் நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் 3.80 லட்ச ரூபாய் கூடுதலாக செலுத்தி கார்டு பெற்றுக் கொள்ள முடியும்.
'எச் - 1பி விசா' வைத்திருப்பவர்களும் தங்களின் வயது வரம்பு முடியும் தருவாயில் இருந்தாலும் அல்லது முடிந்து இருந்தாலும் புதிய சட்டம் அமலான பின் கூடுதலாக பணம் செலுத்தி கிரீன் கார்டு பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புதிய மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேறி சட்டமானால், இந்தியர்கள் அதிக அளவில் பயன் பெறுவர்.