மகளின் திடீர் மரணம்; இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சிகள் நிறுத்தம்
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணியின் திடீர் மரணம் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இலங்கையில் இடம்பெறவிருந்த இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சிகள் பிற்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
என்றும் ராஜா ராஜாதான்
நாளை( 27) ஆம் திகதி சனிக்கிழமை மற்றும்( 28) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவிருந்த இளையராஜாவின் "என்றும் ராஜா ராஜாதான்" இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கையில்,
நிகழ்ச்சிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த இளையராஜா உட்பட பாடகர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் தமிழ்நாட்டில் இருந்து கொழும்புக்கு வருகை தந்திருந்துள்ளனர்.
இசை நிகழ்வுக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், அதே நிகழ்வுக்கான புதிய திகதிகள் மிக விரைவில் அறியத்தரப்படும்.
அதேசமயம் ஏற்கெனவே ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வுக்கான டிக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டவர்கள், அதே டிக்கெட்டுக்களை புதிய திகதிகளிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மேலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மனம் வருந்துகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.