பேருவளை பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள Omicron தொற்றாளர்!
பேருவளை பிரதேசத்தில் Omicron வைரஸ் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக பேருவளை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இரத்தினக்கல் தொழில்துறையுடன் தொடர்புடைய குறித்த நபர் வேலை நிமித்தம் வெளிநாடு செல்லவிருந்த நிலையில் PCR பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். இதன்போது அவருக்கு தொற்றுறுதி ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரது மாதிரி கொரோனா பரம்பரை அலகுகளை இனங்காண்பதற்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே அவருக்கு Omicron வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த நபருடன் நேரடி தொடர்புகளைப் பேணியவர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் ஊடாக ஏனைய பகுதிகளுக்கு வைரஸ் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.