பெங்களூரு–மும்பை விமான சேவையில் பரபரப்பு ; தாமதமாக புறப்பட்ட இண்டிகோ விமானம்
இந்தியா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பை நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானம், பறவை மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர்.

விமானம் ஓடுதளத்தில் இருந்து புறப்படத் தயாரான வேளையில், திடீரென பறவை ஒன்று விமானத்தில் மோதியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் மீண்டும் ஓடுதளத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
பின்னர், விமானத்தின் இயந்திரம் மற்றும் பிற பகுதிகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வுகள் நிறைவடைந்த பின்னர், விமானம் சுமார் ஒரு மணிநேர தாமதத்துடன் மும்பை நோக்கி புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த எதிர்பாராத தாமதம் காரணமாக பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.