தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?
ஆப்பிளை விட கொய்யாப்பழத்தில் தான் நார்ச்சத்தும், வைட்டமின் சி சத்துக்களும் அதிகமாக உள்ளன. அதுவும் ஒரு கொய்யாப்பழமானது 4 ஆரஞ்சு மற்றும் 10 எலுமிச்சைக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ள இந்த பழத்தை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடலில் ஒரு பெரிய மாற்றத்தைக் காணலாம்.

கொலஸ்ட்ரால் குறையும்
கொய்யாப்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சோடியத்தின் அளவை சமநிலையில் பராமரித்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

மலச்சிக்கல் நீங்கும்
கொய்யாப்பழத்தில் கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலத்தை இளகச் செய்து, மலச்சிக்கலில் இருந்து எளிதில் விடுவிக்கும் தற்போது நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இந்த மலச்சிக்கல் பிரச்சனைக்கு எளிய தீர்வை தேடிக் கொண்டிருந்தால், கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள்.

எடை குறையும்
கொய்யாப்பழம் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கும் மற்றும் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும் ஆகவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தால், உங்கள் தினசரி உணவில் கொய்யாப்பழத்தை சேர்த்து வாருங்கள்.

சர்க்கரை நோய்க்கு நல்லது
கொய்யாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. ப்ரீ டயாபெட்டிக் உள்ளவர்கள் இதை உட்கொண்டால், அது குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு கொய்யாப்பழம் மிகவும் நல்லது.
