கேரட் ஜூஸ் உடன் இந்த பொருட்களை சேர்ந்து குடித்தால் இத்தனை நன்மைகளா?
கேரட்டை அரைத்து ஜூஸ் எடுத்து, அந்த ஜூஸ் உடன் ஒருசில பொருட்களை கலந்து குடிக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி வலுவடைந்து, இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? இப்போது கேரட் ஜூஸ் உடன் எந்தெந்த பொருட்களை கலந்து குடிக்கலாம் என்பதையும், அவற்றால் கிடைக்கும் நன்மைகளையும் காண்போம்.

இஞ்சி
ஜூஸ் கேரட் ஜூஸ் தயாரிக்கும் போது, அத்துடன் சிறிது இஞ்சியை சேர்த்து அரைக்கும் போது, ஜூஸிற்கு ஒரு நல்ல ப்ளேவர் கிடைப்பதோடு, அந்த ஜூஸில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை கிடைக்கும். இதன் விளைவாக செரிமானம் மேம்படும், உடலினுள் உள்ள அழற்சி குறையும் மற்றும் மெட்டபாலிசம் மேம்படும். ஆனால் இப்படி ஜூஸை தயாரித்த பின் உடனே குடித்துவிட வேண்டும்.

ஆரஞ்சுஜூஸ்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கவும், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகின்றன. அதற்கு கேரட் ஜூஸை தயாரித்த பின், அத்துடன் ஆரஞ்சு பழத்தின் சாற்றினை கலந்து குடிக்க வேண்டும். இதன் மூலம் இரட்டிப்பு நன்மைகளைப் பெறலாம்.

எலுமிச்சை ஜூஸ்
ஆரஞ்சு பழத்தைப் போன்றே எலுமிச்சையிலும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த எலுமிச்சை கேரட் ஜூஸிற்கு நல்ல நல்ல சுவையைக் கொடுப்பதோடு, ஆரோக்கியத்திலும் நல்ல மாற்றத்தைத் தரும். அதுவும் இவற்றில் உள்ள வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இது உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவி புரிந்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது.

ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள் மற்றும் கேரட் ஜூஸ் மிகச்சிறந்த காம்பினேஷன். இந்த காம்பினேஷனில் ஜூஸை குடிக்கும் போது, அது செரிமானத்திற்கு உதவுவதோடு, உடலை சுத்திகரிக்க உதவுகிறது. ஆப்பிளில் பல வகையான பைட்டோகெமிக்கல்கள் மற்றும் குளோரோஜெனிக் அமிலங்களும் உள்ளன. இவை குறிப்பிட்ட வகையான புற்றுநோய்கள், ஆஸ்துமா, இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது.

தேன்
கேரட் ஜூஸ் தயாரித்த பின், அதில் சுவைக்காக சர்க்கரையை சேர்ப்பதற்கு பதிலாக தேனை சேர்த்து கொள்வது நல்லது. தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை ஜூஸிற்கு நல்ல சுவையை தருவதோடு, குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
