இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகளை தூத்துக்குடி பொலிஸார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் பொலிஸார் நேற்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புல்லாவெளியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் இலங்கைக்கு கடத்துவதற்காக லொறி ஒன்றில் கொண்டு வந்த சுமார் 30 கிலோ எடை கொண்ட 42 மூட்டைகள் பீடி இலைகளும், மற்றொரு லொறியில் கொண்டு வந்த சுமார் 30 கிலோ எடை கொண்ட 41 மூட்டைகள் பீடி இலைகளும் (மொத்தம் 83 மூட்டைகள் பீடி இலைகள்) கியூ பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் லொறிகளின் சாரதிகளையும் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகளின் மொத்த மதிப்பு இந்தியா ரூபாயில் சுமார் 80 லட்சம் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.