ஐபோனுக்கு பதில் தாடி வளர்க்கும் எண்ணெய் டெலிவரி; வாடிக்கையாளருக்கு நஷ்டஈடு !
இந்தியாவில் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஐபோனுக்கு பதில் தாடி வளர்க்கும் எண்ணெய் அனுப்பிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.8 லட்சம் நஷ்டஈடு வழங்க தீர்ர்பு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில், மும்பை பொவாய் பகுதியைச் சேர்ந்த நபர், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று பிளிப்கார்ட் தளத்தில் வட்டி இல்லா மாதத் தவணை முறையில் ரூ.1,11,793 மதிப்பில் ‘ஆப்பிள் ஐபோன் 14 புரோ’ போன் ஆர்டர் செய்தார்.

ஐபோனுக்குப் பதிலாக தாடி வளர்க்கும் எண்ணெய்
ஆனால், பார்சலில் ஐபோனுக்குப் பதிலாக ‘தாடி வளர்க்கும் எண்ணெய்’ இருந்தது. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளருக்கு பிளிப்கார்ட் நிறுவனம் சரியான தீர்வு வழங்கவில்லை.
இதையடுத்து அவர் மும்பை புறநகர் கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பிளிப்கார்ட், அதன் விற்பனையாளர் ‘இன்டர்நேஷனல் வேல்யூ ரீடெய்ல்’ மற்றும் ‘ஆப்பிள் இந்தியா’ ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், “இந்த இழப்புக்கு பிளிப்கார்ட்டும், அதன் விற்பனையாளருமே கூட்டுப் பொறுப்பு. வாடிக்கையாளருக்கு அசல் தொகை ரூ.1,11,793-ஐ 2023 ஏப்ரல் 22 முதல் 9 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும். மன உளைச்சல், வழக்குச் செலவு உட்பட மொத்தம் ₹1.8 லட்சம் வரை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்” உத்தரவிட்டுள்ளது