எம்.பி அருச்சுனாவுக்கு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவு!
மட்டக்களப்பு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தொடுத்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாத எம்பி இராமநாதன் அருச்சுனா உட்பட மூவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றப் பதில் நீதவான் வை.விஜயகுமார் இன்று (12) உத்தரவிட்டார்.

முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறு
வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மீது முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறி, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹம்மத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம் ஆகிய 6 பேருக்கும், சில யூடியூப் மற்றும் முகநூல் பக்கங்களுக்கும் எதிராக நிகழ்நிலைக்காப்பு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த மாதம் 21 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
]
இதனைத் தொடர்ந்து, குறித்த 6 பேரும் வைத்தியர் சுகுணனுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்ததுடன், இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கு இன்று (12) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வை.விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், மௌலவி முஹம்மத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப் ஆகியோர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கியாஸ் ஹிஸ்புல்லா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகினர்.
இவ்வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் இந்நீதிமன்றத்திற்கு இல்லை என்பது தொடர்பிலும், காரணம் காட்டுவது தொடர்பிலும் அவர்கள் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
அதேவேளை, வழக்காளி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்ஷான் டயஸ் மற்றும் சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா ஆகியோர் ஆஜராகிச் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
இருதரப்புச் சமர்ப்பணங்களையும் செவிமடுத்த பதில் நீதவான், நீதிமன்றத்தில் ஆஜராகாத பாராளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, அஹமட் லெப்பை முகமது முத்தார் மற்றும் முகமது இப்ராஹிம் ஆகிய மூவரையும் எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
வழக்கு விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா, "இவ்வழக்கு முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு அல்ல. வழக்காளி வைத்தியர் சுகுணன் மீது தனிப்பட்ட ரீதியில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதற்கு எதிராகவே நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அரசியல் நோக்கங்களுக்காக இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கு என்ற தவறான பிம்பத்தைச் சிலர் சமூக வலைத்தளங்களில் சித்தரித்து வருகின்றனர்" எனக் குறிப்பிட்டார்.