இலங்கையை உலுக்கிய மட்டக்களப்பு கிணறு விவகாரம் ; சந்தேக நபர்களுக்கு அதிரடி உத்தரவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, நகைகளை கொள்ளையிட்ட பின்னர், அவர்களை கிணற்றில் தள்ளிவிடும் கொடூரச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர் மற்றும் 22 வயதுடைய சகோதரர், முச்சக்கரவண்டி சாரதி ஆகியோருடன் கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் என மொத்தமாக 6 பேரும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தீவிர விசாரணை
மயக்க மருந்து வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு - வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபரை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொலிஸ் தடுப்புக் காவலில் 3 நாட்கள் வைத்து தொடர்ந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் வைத்து மயக்க மருந்து கொடுத்து நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைக் கொண்டு சந்தேக நபர்களை அடையாளம் காணும் ஆள் அடையாள அணிவகுப்பு இன்று (2) நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது.
மாவட்டத்தையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். சந்தேக நபர்களிடமிருந்து ஏற்கனவே மயக்க மருந்துகள், கார், முச்சக்கரவண்டிகள் மற்றும் கோடாரி உள்ளிட்ட சான்றாதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இடம்பெற்ற இந்த மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலதிக சாட்சியங்களைத் திரட்டும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.