பதவிவேண்டி பாய்போட்டு படுத்திருக்கும் மட்டக்களப்பு எம்.பிக்கள்
அமைச்சு பதவிகளை தங்களுக்கு வழங்க கூறி மட்டக்களப்பு இரண்டு அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டின் முன்பாக பாய் போட்டு படுத்து கிடப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் நேற்று எரிவாயு விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துடன் பதற்ற நிலைமையும் ஏற்பட்டது. கடந்த ஏழு தினங்களுக்கு மேலாக மட்டக்களப்பு நகரில் எரிவாயுவுக்காக மக்கள் இரவு பகலாக வீதியில் உறங்கும் நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிவாயு விநியோகம் செய்யும் இரண்டு முகவர்கள் பக்கச்சார்பாக செயற்படுதாகவும் இது தொடர்பில் அரசியல்வாதிகளோ,அதிகாரிகளோ பாராமுகமாகயிருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தினக்கூலிக்கு சென்று அன்றாடம் தமது குடும்பங்களை நடாத்துபவர்கள் நான்கு நாட்களுக்கும் மேலாக எரிவாயுவிற்காக காத்திருப்பதால் தமது குடும்பங்கள் பாரிய கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இதன்போது அங்குவந்த மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் மக்களுடன் நிலைமைகளை கேட்டறிந்துகொண்டதுடன் குறித்த பகுதியிலிருந்து மாவட்ட அரசாங்க அதிபரையும் தொடர்புகொண்டு மக்களின் நிலைமைகள் குறித்து நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன், ”தற்போதைக்கு எந்தவிதமான எரிவாயு இறக்குமதியும் இல்லை எதிர்வரும் நான்காம் திகதி பின்னர்தான் இலங்கைக்கு எரிவாயு கப்பல் வரக்கூடியதாக இருப்பதாக அறிய முடிகின்றது.
குறிப்பாக மேல் மாகாணத்தில் அதிகளவான எரிவாயுக்கள் வழங்கி வைக்கப்படுவதாகவும் அங்குள்ள அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதற்காக பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடி குறித்த தீர்வுகளை பெற்றுக் கொள்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாக எங்கேயாவது கதைப்பதை காணவும் இல்லை ஆனால் இன்று மக்கள் எரிவாயு காக வீதிகளில் பாய் போட்டு படுத்து உறங்கும் நிலையில் அந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கக் கோரி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாசலுக்கு முன்பாக பாய் போட்டு படுத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.