மட்டக்களப்பு கடத்தல் சம்பவம் ; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், மற்றுமொரு பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை இன்று (10) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கடத்தல், கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி கட்டளையிட்டார்.
இன்றைய வழக்கு விசாரணையின்போது, சந்தேக நபர்களில் ஒருவர் மாத்திரமே நேரில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஏனைய சந்தேக நபர்களிடம் நிகழ்நிலை (Online) ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
வழக்கின் மேலதிக விசாரணைகள் அனைத்தும் எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.