எரிபொருள் விலை விவகாரம் ; நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் கடும் விமர்சனம்
அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், தான் ஒரு அமைச்சராக இருந்திருந்தால் இந்நேரம் தார்மீகப் பொறுப்பேற்றுப் பதவி விலகியிருப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
விசாரணைகளுக்கு முகங்கொடுத்து, குற்றமற்றவர் என நிரூபணமான பின்னரே மீண்டும் பதவியை ஏற்பது ஒரு கௌரவமான செயலாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலையை 100 அல்லது 200 ரூபாவால் உயர்த்திவிட்டு, பின்னர் அதில் 20 ரூபாவைக் குறைத்து அதனை 'நிவாரணம்' என அறிவிப்பது மக்களை முட்டாளாக்கும் ஒரு நாடகம் என அவர் கடுமையாகச் சாடினார்.
600 ரூபாவாக இருக்கும் பெற்றோல்ல் விலையை இவ்வாறு கையாள்வது எவ்விதத்திலும் மக்களுக்குப் பயனளிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் முன்வைக்கும் இவ்வாறான தர்க்கமற்ற காரணங்களை மக்கள் நம்புகிறார்கள் என்றால், தான் ஒரு முட்டாள் என்பதை ஏற்றுக்கொள்வதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
உண்மைகளை மறைத்து மக்களுக்குப் பொய் சொல்லும் கலாசாரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.