இரஜாங்க அமைச்சர் சிவநேசதுரையிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!
மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு ஊடாக வழங்கப்பட் அனைத்து காணிகள் குறித்தும் மீள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Santhirakanthan) அவர்களிடம் முன்வைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரியான விமல் ராஜ் அவர்களிடம் 10 பேர்ச் காணிகளை வாங்கி விட்டு அவர் செய்த ஊழல்கள் தொடர்பில் ஊடகங்களில் வெளிக் கொண்டுவரவில்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உண்மையில் இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பில் மட்டுமல்லாமல் அனைத்து ஊடகவியலாளர்கள் மத்தியிலும், தமிழ் சமூகத்திலும் ஊடகவியலாளர்கள் தொடர்பான தவறான விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளராக தெளிவுபடுத்த வேண்டி பொறுப்பு எமக்கு உண்டு. மட்டக்களப்பில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் காணி ஊழல்களை இது வரை வெளிக்கொண்டு வரவில்லையா? அதுவும் இவர்கள் கூறும் அதிகாரிகள் தொடர்பாக கடந்த காலங்களில் வெளிவந்த செய்திகள் மற்றும் ஆதாரங்கள் யாரூடாக வெளிவந்தது? என்பதை தெளிவாக ஆராய வேண்டும்.
இலங்கை அரசின் காணி அமைச்சு மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு ஊடாக வீட்டு திட்டம் ஒன்றிற்காக ஊடகவியலாளர்களுக்கு 10 பேர்ச் காணி வழங்கப்பட்டுள்ளது.
இது ஏனைய மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக அந்த வீட்டு திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் அந்த காணிகள் வழங்கப்பட்டபடியே தற்போதும் உள்ளது.
இது போன்ற பல ஏக்கர் காணிகள் அரச உத்தியோகத்தர்கள் முதல் கொண்டு சாதாரண பொதுமக்கள் வரைக்கும் அரசாங்க நிர்வாக சட்டங்களுக்கு உட்பட்டு ஆவணங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த காணி வழங்கியதற்கும் அரச அதிகாரிகளின் ஊழலுக்கும் தொடர்பு உள்ளது என்றால்? அந்த அதிகாரியின் ஊடாக மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்ட அத்தனை காணிகளுக்கும் ஊழலுக்கும் தொடர்பு உள்ளது என்று தானே அர்த்தம்?
மாவட்ட செயலகத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழு ஊடாக வழங்கப்பட்ட அத்தனை காணிகளும் இலஞ்சமாகவாக வழங்கப்பட்டது? மாவட்டத்தில் உள்ள அரசியல் வாதிகள் முதல் கொண்டு அரச அதிகாரிகள் அவர்களது உறவினர்கள், தனியார் நிறுவனங்கள் என அனைவருக்கும் காணி வழங்கப்பட்டுள்ளன எனவே அவை அனைத்தும் இலஞ்சமாகவா வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது?
எமக்கான ஒரு உரிமையை அரச நிர்வாகம் செயற்படுத்தும் போது அதுவும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆவணங்கள் ஊடாக செய்யும் போது அதனை எவ்வாறு இலஞ்சமாக கருத முடியும்?
மட்டக்களப்பில் உள்ள அரச அதிகாரிகள் முதல் கொண்டு அரசியல் வாதிகள், அவர்களது முகவர்கள் என பலருக்கும் பல ஏக்கர் கணக்கான காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
பல அரச காணிகள் தனியார் காணிகள் என்ற போர்வையில் அரச அதிகாரிகளால் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு தயார் நிறுவனங்கள் மற்றும் தனவந்தர் களுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
பல பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் தங்களது உறவினர்கள் முதல் கொண்டு சில அரசியல் தலைவர்களின் பினாமிகளுக்கும் பல ஏக்கர் காணிகளை ஆவணங்கள் தயாரித்து வழங்கி உள்ளனர்.
இந்நிலையில் இவை குறித்து விசாரணை நடாத்தி ஊழல் செய்தவர்களை தண்டிக்க முடியாத நீங்கள் ஊடகவியலாளர்கள் மீது குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயமானது?
நாங்கள் தயாராக உள்ளோம் எமது காணிகளை மீள ஒப்படைப்பதற்கு. அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழு ஊடாக வழங்கப்பட் அனைத்து காணிகள் குறித்தும் மீள் விசாரணை நடத்தப்பட்டு ஒரு ஏக்கர் காணிக்கு அதிகமாக உள்ள அத்தனை காணிகளும் மீளப் பெறப்பட வேண்டும்.
இதனை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முன் நின்று நடைமுறைப்படுத்த வேண்டும். என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.