குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்
தன்மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டவையென இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவருடன் இரகசிய உடன்படிக்கை செய்ததாகவும், பின்னர் தமக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் பரப்பப்படும் தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.

தான் ஒரு மோட்டார் வாகன நிறுவனத்தின் சார்பில், சட்டத்தரணியாக தனது தொழில்முறை கடமையின் அடிப்படையிலேயே நீதிமன்றங்களில் ஆஜராகியதாகவும், அதில் எந்தவித தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அறிந்தே பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், அவ்வாறான முறைப்பாடுகளுக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிப்பட்ட தாக்குதல்கள் தம்மை அச்சுறுத்தாது என்றும், உண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து உறுதியாக இருப்பேன் என்றும் ரஜீவ் அமரசூரிய தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.