எளிதான வெற்றியைக் கோட்டைவிட்ட பெங்களூரு....பந்துவீச்சில் அசத்திய ஐதராபாத்
ஐபிஎல் 2021 தொடரின் 52-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது . இதில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதற்கான டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் - அபிஷேக் ஷர்மா ஜோடி களமிறங்கியது. இதில், அபிஷேக் ஷர்மா 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, ஜேசன் ராய் தனது அதிரடி ஆட்டத்தால் 44ஓட்டங்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடி 31 ஓட்டங்களை சேர்த்தபோது தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த பிரியம் கர்க் 15 ஓட்டங்களுக்கும், அப்துல் சமாத் 1 ஓட்டங்களுக்கும், சாகா 10 ஓட்டங்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஜேசன் ஹோல்டர் (16 ஓட்டங்கள்) களத்தில் இருந்தார்.
இதனையடுத்து 142 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர். விராட் கோலி தொடக்க ஓவரின் இறுதி பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக ஆல் ரவுண்டர் கிறிஸ்டின் களமிறங்கினார் அவரும் வந்த வேகத்தில் கவுல் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தபோதும் தொடக்க வீரர் படிக்கல் ஒருபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மேக்ஸ்வெல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டினார்.
அவரும் 25 பந்துகளில் 45 ஓட்டங்களில் வில்லியம்சனால் அட்டகாசமாக அவுட்டாக்கப்பட்டார். இதனால் ஆட்டத்தில் சற்று திருப்புமுனை ஏற்பட்டது. கடைசி ஒரு ஓவரில் 13 ஓட்டங்கள் எடுக்கவேண்டும் என்ற நிலையில் புவனேஸ்வர் குமார் பந்துவீசினார். கார்டன் ஸ்ட்ரைக்கில் இருந்தார்.
முதல் பந்தில் ஓட்டம் ஏதும் இல்லாத நிலையில் இரண்டாவது பந்தில் ஒரு ஓட்டம் எடுத்தார் கார்டன். அதனால், டிவில்லியர்ஸ் ஸ்ரைக்குக்கு வந்தார். மூன்றாவது பந்தில் பவுண்டரி விரட்ட முயல அது பீல்டரின் கைக்கு போனது. அதனால், ஏபி டிவில்லியர்ஸ் ஓட்டம் ஏதும் ஓடவில்லை.
நான்காவது பந்தில் சிக்ஸ் அடித்து பெங்களூருவுக்கு நம்பிக்கை ஊட்டினார். இரண்டு பந்துகளில் 6 ஓட்டங்களுக்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் புவனேஸ்வர் குமாரின் சிறப்பான பந்துவீச்சால் டிவில்லியர்ஸால் ரன் ஏதும் எடுக்க முடியாமல் போனது. அதனால், ஹைதராபாத் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.