நாட்டில் தொடரும் மோசமான வானிலை ; வடகிழக்கில் நிலைகொண்ட தாழமுக்கம்
இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தாழமுக்கம் அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு விலகிச் செல்லக்கூடும் என்றும், பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதன் தாக்கம் காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கடும் காற்றும் மழையும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சிலாபம் முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை எழும் அபாயமும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என்பதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடல் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.