ஆசாத் மௌலானாவின் திடுக்கிட வைக்கும் உண்மைகள்! முக்கியஸ்தர் வெளியிட்டுள்ள தகவல்
ஆசாத் மௌலானாவை எனக்கு நன்றாக தெரியும். பிள்ளையானுடன் மிக நெருங்கி செயற்பட்டவர். சனல் 4 காணொளியில் அவர் கூறியிருப்பதை நிராகரித்து விட முடியாது. எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஆசாத் மௌலானா கூறியவற்றில் பெரும்பாலும் உண்மைத் தகவல்களே உள்ளன என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையில் நான் சுகாதார அமைச்சராக இருந்த போது முதலமைச்சராக இருந்த சிவநேசத்துரை சந்திரகாந்தனின் செயலாளராக ஆசாத் மௌலானா செயற்பட்டுள்ளார்.
நன்றாகப் பேசக்கூடிய ஒருவர். சமய நிகழ்வுகளில் என்னோடுதான் இணைந்து கொள்வார். சமய கொள்கைகளை கடைப்பிடிக்கின்ற ஒருவர். ஆனால் அவர் பொய் பேசுவாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னோடு அவர் அப்படி பேசியதும் கிடையாது.
அப்போது முதலமைச்சராக இருந்த சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மிக நெருக்கமாக இருந்தவர். மிக உதவியாக இருந்தார், என்ன பிரச்சினையோ எனக்கு தெரியாது.
உண்மையில் பிள்ளையான் சிறையினுள்ளே இருந்தபோது அவரை விடுதலை செய்து வெளியில் கொண்டு வருவதற்கு கடுமையாக உழைத்த ஒரு நபர் ஆசாத் மௌலானா.
இப்போது அவர் சனல் 4இல் வெளியிட்டுள்ள விடயங்கள், அவருடைய கருத்துக்களை நான் கேட்கின்ற போது அதில் நிராகரிக்க கூடிய வகையில் அந்த கருத்துக்கள் அமையவில்லை.
அவருடைய கருத்துக்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, ஆசாத் மௌலானா சொல்லும் கருத்துக்களையும், நடந்த விடயங்களையும், நான் அறிந்த, கிடைத்த சில விடயங்களையும் வைத்து பார்க்கும் போது ஆசாத் மௌலானாவின் தகவல்களை முழுமையாக நிராகரிக்க முடியாது.
சில சில விடயங்கள் உட்சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவை நிராகரிக்கக் கூடியவாறு இல்லை. ஆசாத் சொன்ன விடயங்களில் நிறைய உண்மைகள் இருக்கின்றது. எனவே அவை உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்.
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் பிள்ளையான் தொடர்புபட்டாரா என்பது எனக்கு தெரியவில்லை.
ஆனால் ஆசாத் மௌலானாவின் கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது பிள்ளையானுடன் இணைந்து செய்ததாகத்தான் அவர் கூறியிருக்கின்றார்.
அவ்வாறிருப்பின் விசாரணைகள் செய்துதான் அவை கண்டறியப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.