அவிஷ்கா ஃபெர்னாண்டோ அதிரடி: தென் ஆப்பிரிக்காவை துவம்சம் செய்த இலங்கை!
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பு அட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ சதமடித்தும், சரித் அசலங்கா அரைசதம் விளாசியும் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 300 ஒட்டங்களை சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 118 ஓட்டங்களையும், சரித் அசலங்கா 72 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ், ரபாடா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்கரம் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்க்ரம் 96 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் பவுமா 38 ஓட்டங்களிலும், ரஸ்ஸி வென்டெர் டுசென் 59 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் அந்த அணியால் ஆட்ட இறுதியில் 286 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் இலங்கை அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதோடு, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.