கரூரில் இரவோடு இரவாக நடந்த பிரேத பரிசோதனை ; மர்மங்களுக்கிடையில் வெளியான உண்மை
கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்விடயம் தமிழக அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், சம்பவம் நடந்த அன்றே உயிரிழந்தவர்களுக்கு அவசர அவசரமாக பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ள முடியாது என்ற போதும் அவசர அவசரமாக ஏன் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது.எனவே, இது குறித்து தமிழக அரசு தரப்பில் இருந்து இதற்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாகச் சுகாதாரத் துறைச் செயலாளர் கூறுகையில், "கரூர் மருத்துவமனையில் மொத்தம் சில மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளனர். மேலும், அன்றைய தினம் தான் சேலத்தில் பொதுச் சுகாதார மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில் நிறைய மருத்துவர்கள் கலந்து கொண்டனர். நானும் அதில் பங்கேற்றிருந்தேன். இந்தச் செய்தி வந்ததும் அந்த மருத்துவர்களை கரூர் அனுப்பி விட்டோம்.
பொதுவாகவே பிரேத பரிசோதனை தொடர்பான வழக்குகளில் சீக்கிரம் செய்து கொடுக்க கூறியே அறிவுறுத்தல் வரும். இதுபோன்ற பெரிய சம்பவங்களில் தீவிரத்தன்மை அதிகமாகவே இருக்கும்.
காலை 6 முதல் மாலை 6 வரை தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றாலும் இதுபோன்ற நிகழ்வுகளில் கலெக்டர் அனுமதியுடன் இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம் என விதி இருக்கிறது.
குறித்த பிணவறையில் அதிகபட்சம் 28 உடல்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால், ஏற்கனவே சில உடல்கள் இருந்தன. அன்றைய தினம் அண்டை மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் வந்தனர்.
மேலும், ஒரு உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யக் குறிப்பிட்ட காலம் ஆகும். இதுபோன்ற சூழல்களில் தாமதம் ஆக ஆக மக்களிடையே பதற்றம் அதிகமாகும்.
இரவு 2 மணிக்குப் பிரேதப் பரிசோதனை தொடங்கப்பட்டாலும் கூட 40 பேரின் உடல்களையும் பிரேதச் சோதனை செய்ய மறுநாள் மாலை 4 ஆகிவிட்டது.
காலை 6 மணிக்குப் பிரேதப் பரிசோதனை தொடங்கியிருந்தால் மறுநாள் வரை நீடித்து இருக்கும். அதன்போது மக்களிடையே வேதனையும் கோபமும் அதிகமாகவே இருக்கும்.
ஏற்கனவே உறவுகளை இழந்த மக்கள், உடல்கள் கிடைக்காமல் வேதனை அடைவார்கள்" என விளக்கமளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.