பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு முன்னுரிமை ; ADB புதிய பணிப்பாளரின் உறுதிமொழி
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷானன் கவுலினை (Ms. Shannon Cowlin) இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, இலங்கையின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்று ஷானன் கவுலின் மீண்டும் உறுதியளித்தார்.
பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதே தமது எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தையும், நிறுவன ஒருங்கிணைப்பின் செயல்திறனையும் அவர் பாராட்டினார்.
டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டெழுவதற்காக அரசாங்கம் செயல்படுத்தி வரும் விரிவான திட்டம் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார்.
அதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எட்டப்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்கால சந்ததியினருக்காக மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவலியுறுத்தினார்.
அந்த சவாலை வெற்றிகொள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் ஒத்துழைப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.


