யாழில் இடம்பெற்ற சம்பவம்; முச்சக்கரவண்டி சாரதிகளே அவதானம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பயணிகள் போல பாசாங்கு செய்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நூதனமாக பணம் மற்றும் நகைகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஒரே நாளில் இரு சம்பவங்கள்
நேற்று(04) பகல் பருத்தித்துறையில் இருந்து முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலையில் உள்ள காணிகளை பார்ககவென கூறி பெண் ஒருவரும் இரண்டு ஆண்களும் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
கீரிமலையில் முச்சக்கர வண்டி சாரதிக்கு குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு சாரதியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
அதே கும்பல் மற்றொரு முச்சக்கர வண்டியை கீரிமலையில் இருந்து வாடகைக்கு அமர்த்தி பருத்தித்துறைக்கு செல்லும் வழியில் அந்த சாரதிக்கும் குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு சாரதியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை கீரிமலையில் மயக்கமடைந்த முச்சக்கர வண்டி சாரதி தெல்லிப்பழை வைத்தியசாலையிலும், மற்றையவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் ஒரே கும்பல் இரு வேறு நூதன திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் முச்சக்கரவண்டி சாரதிகள் இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்காது அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.