தேசிய மக்கள் சக்தியின் தலைவர் வாகனத்தின் மீது இடம்பெற்ற தாக்குதல்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவின் வாகனம் மீது அழுகிய முட்டைகள் மற்றும் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் தேசபந்து தென்னகோனின் நேரடி கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இந்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
கம்பஹா மாவட்டம் - கலகெடிஹேனவில் கடந்த ஜனவரி 30 ஆம் திகதி மாலை வேளையில், கலகெடிஹேன கிளாஸ் கோ மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற போது, அந்த மண்டபத்தின் பிரதான வாயிலுக்கு அருகே வைத்து அனுர குமார திசாநாயக்கவின் வாகனம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸாருக்கு பதிவாகியிருந்தது.
இதன்போது, அனுர குமார திஸாநாயக்கவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத போதும், மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருந்த ஒருவர் கல்வீச்சினால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பிரதானி ஒருவர் பொலிஸாருக்கு தெரிவித்தார்.
மேலும் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திஸாநாயக்க, மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்து தனது வாகனத்தை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மண்டபத்தை நோக்கி செல்லும் போது இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து, அக்கட்சியின் ஆதரவாளர்கள், தாக்குதல் நடத்திய கும்பலை துரத்திச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இருவர் பிடிபட்டுள்ளதுடன் ஏனையோர் தப்பியோடியுள்ளனர். கட்சி ஆதரவாளர்களால் பிடிக்கப்பட்ட இருவரும் நிட்டம்புவ பொலிஸாரிடம் பின்னர் ஒப்படைக்கப்பட்டதாகவும், பொலிஸார் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் நிட்டம்புவ பொலிசார் கூறினார். பிடிபட்ட இருவர் மீதும் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடாத்தியுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரினால் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்துள்ளனர்.
எனவே தற்போது இது குறித்த விசாரணைக்கு தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.