யாழில் கூரியர் சேவை பொருட்களை பெற்றுக்கொண்டு சண்டித்தனம்; நீதிமன்றம் அதிரடி
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (01) கூரியர் சேவை வழங்க சென்ற ஊழியரை தாக்கியவர் விளக்கமறியலில் வைக்கபப்ட்டுள்ளார்.
கூரியர் சேவையில் கிடைக்கப்பெற்ற பொருட்களை வாங்கி விட்டு பணம் செலுத்தாது கூரியர் ஊழியரை வீட்டுக்குள் அழைத்து சென்று தாக்கிய நபரை இளவாலை பொலிஸார் கைது செய்தனர்.
பொருட்களை பெற்றுக்கொண்டு சண்டித்தனம்
சந்தேகநபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வீடொன்றின் விலாசத்திற்கு கூரியர் சேவையூடாக அனுப்பப்பட்ட பொருட்களை கூரியர் சேவை வழங்கும் ஊழியர் ஒருவர் எடுத்து சென்றுள்ளார். ஊழியரிடம் பொருட்களை பெற்றுக் கொண்ட நபர் அதற்கு உரிய பணத்தினை செலுத்த மறுத்துள்ளார்.
அதனை கேட்ட ஊழியரை, தனது வீட்டுக்குள் அழைத்து சென்று சரமாரியாக தாக்கி விட்டு, ஊழியரை துரத்தி உள்ளார்.
தாக்குதலுக்குள்ளான ஊழியர் அது தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து , தாக்குதலை மேற்கொண்ட நபரை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.