அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியம் ; வெளியான முக்கிய அறிவிப்பு
2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரச சேவையில் இணைந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களின் நீண்டகால எதிர்பார்ப்பிற்குத் தீர்வாக, புதிய ஓய்வூதியத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2016 பாதீட்டுத் திட்ட முன்மொழிவின்படி, 01.01.2016 இற்குப் பின்னர் பணியில் இணைந்தவர்களின் நியமனக் கடிதங்களில் "அரசின் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு இணங்க வேண்டும்" என்ற நிபந்தனையுடன் ஓய்வூதிய ஏற்பாடு சேர்க்கப்பட்டிருந்தது.

ஓய்வூதிய முறை
இருப்பினும், புதிய ஓய்வூதிய முறை இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.
தற்போதுள்ள ஓய்வூதிய முறையின் கீழ் இவர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், 2026 பாதீட்டுத் திட்டத்தின் மூலம் நியமனக் கடிதங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி 2016.01.01 இற்குப் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களின் நியமனக் கடிதங்கள் இனி, "இந்நியமனம் ஓய்வூதியம் உள்ளதாகும். நீங்கள் விதவைகள் தபுதாரர் ஓய்வூதிய முறைக்குப் (W&OP) பங்களிப்புத் தொகை செலுத்தப்பட வேண்டும்" என மாற்றியமைக்கப்படவுள்ளது.
இதற்கமைய பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.