அஸ்வெசும நிதி மோசடி ; 6 ஆசிரியர்கள் இடைநிறுத்தம் ; பெண் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
நோர்வூட் பிரதேச செயலகத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, அங்குள்ள பிரிவு பொறுப்பாளர்களான இரண்டு பெண் சந்தேகநபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இருவரும் நேற்று (08) ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்
நிதி அமைச்சு மற்றும் நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் 6 ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில், குறித்த 6 ஆசிரியர்களின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மோசடி தொடர்பில் மேலும் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும், மோசடி செய்யப்பட்ட தொகை 2 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
மேலும், பிரதான சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரரின் வங்கிக் கணக்கிலும் பெருமளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர் பதவி வகித்த குறித்த சந்தேகநபரின் பணியையும் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.