அஸ்வெசும ஊழல் மோசடி; இரு பெண் உத்தியோகத்தர்கள் கைது!
அஸ்வெசும ஊழல், மோசடி தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று (31) மாலை ஹட்டன் விசேட குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு உத்தியோகத்தர்களும் 2025ம் ஆண்டு முதல் இதுவரை காலப்பகுதியில் 29இலட்சத்து 89ஆயிரத்து 500ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல், மோசடிகள்
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நோர்வூட் பிரதேச செயலகத்தின் இரு அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், மாவட்ட செயலாளரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் இரு அதிகாரிகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கும் இடமாற்றப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.