சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்; மாநகர சபை பகிரங்க அறிவித்தல்!
பொதுமக்கள் நுவரெலியா மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய வரி பணத்தை செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவுள்ளதாக நுவரெலியா மாநகர சபை பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளது.
நுவரெலியா மாநகர சபை ஆணையாளரின் உத்தரவின் பேரில் இந்த விசேட அறிவித்தல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருமாத கால அவகாசம்
அந்த விசேட அறிவித்தலில் நுவரெலியா மாநகர சபைக்கு வரி பணம் செலுத்த தவறியவர்களின் சொத்துக்களை (15.08.2024) முதல் (15.10.2024) வரையான காலப்பகுதிக்குள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த (30.06.2024) வரையான காலப்பகுதிக்குள் அரசாங்க சொத்துக்களில் இருந்தும்,தனியார் சொத்துக்களில் இருந்தும் நுவரெலியா மாநகர சபைக்கு 15,614,400.21 ரூபாய் வரி பணம் வந்து சேர வேண்டும் என மாநகர சபை கணக்காளர் பிரிவுக்கு பொறுப்பான பிரதான கணக்காளர் தெரிவித்தார்.
அதேநேரம் மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய வரி பணத்தினை வரி செலுத்த கூடியவர்கள் உரிய முறையில் செலுத்த தவறிய பட்சத்தில் மாநகர சபையின் ஆணையாளரின் அதிகாரத்திற்கு அமைய பொது மக்கள் பார்வைக்காக இந்த விசேட அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மாநகர சபைக்கு வரி செலுத்த தவறியவர்கள் எதிர்வரும் (15.08.2024)க்கு முன்பாக வரி பணத்தை செலுத்தி தங்களது சொத்துக்களை காப்பாற்றி கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்வதாகவும் மாநகர சபை கணக்காளர் பிரிவு தெரிவித்துள்ளது.