ஆசிய கோப்பை ; ஹொங்கொங் அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி
ஆசிய கிண்ணத்தின் இன்றைய (15) போட்டியில் ஹொங்கொங் அணியை 4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வீழ்த்தியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ஹொங்கொங் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Nizakat Khan ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் 150 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸங்க 44 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இறுதி நேரத்தில் ஆடுகளம் புகுந்த வனிந்து ஹசரங்க 9 பந்துகளில் 2 நான்கு, ஒரு 6 ஓட்டங்கள் அடங்கலாக 20 ஓட்டங்களை அதிரடியாக பெற்று அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக பெத்தும் நிஸ்ஸங்க தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி சுப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.