அரவிந்த டி சில்வா மற்றும் மனைவியின் பிடியாணை வாபஸ்
இலங்கையின் முன்னாள் கிரிகெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தினால் எயார்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்தபோது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக உள்ள கபில சந்திரசேனவின் மனைவிக்காகப் பிணையாளிகளாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு எதிராக நேற்று (16) பிறப்பிக்கப்பட்ட பிடியாணையினை மீளப் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பாஸன் அமரசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.

அரவிந்த டி சில்வாவின் தாயாரின் மரணச் சடங்குகள் காரணமாக அவர்களால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாக, இன்று மன்றில் தாக்கல் செய்யப்பட்ட மோஷன் மனு ஊடாக ஆஜராகிய சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இவ்விடயத்தைக் பரிசீலித்த நீதிவான், அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையினை உடனடியாக வாபஸ் பெறுமாறு உத்தரவிட்டுள்ளார்.