கொழும்பில் பொலிஸாரின் அதிரடி சுற்றுவளைப்பில் சிக்கிய ஐவர்; ஆவணங்களும் மீட்பு
போலி ஆவணங்களைத் தயாரித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட கல்விச் சான்றிதழ்கள்
பொரலெஸ்கமுவ, மஹரகம, நிட்டம்புவ மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சுற்றிவளைப்புகளின் போது, டுபாயில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் 10 ஒப்பந்தங்கள், விண்ணப்பதாரர்களின் 27 படிவங்கள், ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கணினி ஒன்று மற்றும் அரச பாடசாலை அதிபர்கள்,
பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த நிறைவேற்றுத் தர அரச அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பெயர்களில் போலித்தனமாகத் தயாரிக்கப்பட்ட பெருமளவிலான உத்தியோகபூர்வ இலச்சினைகள் (Seals) கைப்பற்றப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாது , மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பாடசாலை விலகல் சான்றிதழ்களும் இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது