கோடீஸ்வரர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு ; திலினி பிரியமாலிக்கு மீண்டும் பிடியாணை
கோடீஸ்வர தொழிலதிபர்களின் தொழில்களில் முதலீடு செய்வதாக வாக்குறுதியளித்து அவர்களை ஏமாற்றி பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, தற்போது பிணையில் உள்ள திலினி பிரியமாலியை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதிபதி பாசன் அமரசேன நேற்று (02) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதனையடுத்து, அவருக்கு பிடியாணை பிறப்பித்த நீதிபதி, சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபர் இல்லாத நிலையிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 192ஆவது பிரிவின் கீழ் வழக்கு விசாரணையை முன்னெடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், திலினி பிரியமாலியின் பிணைதாரர்கள் மறுநாள் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்புகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள உலக வர்த்தக நிலையத்தின் 34ஆவது மாடியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த திலினி பிரியமாலி, திட்ட முதலீடுகளுக்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து பல கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.