சூடானில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்; அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் பலர் கைது!
சூடானில் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம் அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிகின்றன.
இனந்தெரியாத படையினர் பிரதமர் அப்தொல்ல ஹம்டொக்கை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இராணுவம் இது குறித்து எதனையும் தெரிவிக்காத போதிலும் ஜனநாயக சார்பு அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. எனினும் அதிகாலையில் இடம்பெற்ற முக்கிய புள்ளிகளின் கைதுகளிற்கு யார் காரணம் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை கூட்டு இராணுவ படையினர் இந்த கைதுகளை முன்னெடுத்துள்ளனர் என தகவல்அமைச்சு முகநூலில் தெரிவித்துள்ளது. எனினும் கைதுசெய்யப்பட்டவர்கள் இனந்தெரியா இடங்களில் வைக்கப்ட்டுள்ளனர் என தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் சதிப்புரட்சிக்கு ஆதரவளிக்குமாறு பிரதமரிற்கு அழுத்தம் கொடுத்துவருகின்றனர் ஆனால் அவர் அதனை ஏற்க மறுக்கின்றார் பொதுமக்களை அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இணையவசதி தலைநகரில் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக சீற்றமடைந்த பொதுமக்கள் வீதிகளில் டயர்களை எரிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

