மன்னாருக்கு செல்ல அனுமதி இல்லை ; இராணுவத்தால் திருப்பி அனுப்பப்படும் மக்கள்
தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் இடம் பெயர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மன்னார் பிரதான பாலத்தில் வெள்ள நீர் காணப்படுவதனால் மன்னார் நகரில் இருந்து அவசிய தேவை இன்றி பயணிப்பவர்களை இராணுவத்தினர் மன்னார் பிரதான பால நுழைவு பகுதியில் வைத்து திருப்பி அனுப்புகின்றனர்.

நீர் மட்டம் உயர்வு
மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக ஆற்று நீர் மட்டம் உயர்ந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் தற்போது 16.9 அடியாகவும் காணப்படுகின்றது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக வெள்ள நீர் மட்டம் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மடு, நானாட்டான், முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாழ்நில கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பாதிப்புகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுமாறும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.
காற்றின் வேகம் தொடர்ச்சியாக உயர்வாக காணப்படுவதனால் கடற்கரை ஓரங்களில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு, தேவன்பிட்டி, அந்தோனியார் புரம் ஆகிய கிராமங்கள் கடல் நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் முப்படையினர் ஈடுபட்டுள்ளதோடு, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மாவட்ட செயலகத்துடன் இணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மன்னார் பகுதியில் கடற்கரையோரங்களில் நங்கூறமிடப்பட்ட மீன்பிடி படகுகள்,கடும் காற்று மற்றும் மழை காரணமாக வேறு பகுதியில் கரை ஒதுக்கி உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளதோடு,மீனவர்கள் பாரிய பாதிப்பையும் எதிர்நோக்கி வருகின்றனர்.