கிளிநொச்சியில் இராணுவம், பொலிஸ் திடீர் சுற்றி வளைப்பு
தமிழர் தாயகப் பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறு பகுதியில் காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கல்லாறு பகுதியில் கடந்த 4ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் சென்ற காவல் துறையினர் மீதும் வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்லாறு பகுதியில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து இரு வாள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பவத்தில் நான்கு காவல்துறையினர் காயமடைந்த நிலையில் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து இரு வாள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, இன்றைய தினம் அப்பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தருமபுரம் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்துள்ளனர்.
அத்துடன், அனுமதிப்பத்திரம் இன்றிய மோட்டார் வாகனங்கள் 4, வாள் 1, இடியன் துப்பாக்கி 1 மற்றும் சட்டவிரோத கசிப்பு 18 லீற்றர் என்பனவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் - சுழிபுரம் ஜே/170 கிராம சேவகர் பிரிவில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வீடொன்றிலிருந்து, கோடாரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
ஆயுதங்கள் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.