அர்ச்சுனாவின் சர்ச்சை பேச்சால் புதிய சந்தேகம் ; சட்டத்தரணி உமாகரன் இராசையா அதிரடி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் உத்தியோகபூர்வ துப்பாக்கியைத் தவிர மேலும் ஒரு சட்டவிரோத துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர் சீமான் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா, “இந்தியாவுக்கு துப்பாக்கி எடுத்து வர முடிந்திருந்தால் சீமானைச் சுட்டுக் கொன்றிருப்பேன் அல்லது அவர் யாழ்ப்பாணம் வந்தால் சுட்டுக் கொல்வேன்” என பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும், பெண் ஒருவரைத் துப்பாக்கியால் அச்சுறுத்திய வழக்கில் அர்ச்சுனாவின் உத்தியோகபூர்வ துப்பாக்கி ஏற்கனவே நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், மீண்டும் “சுட்டுக் கொல்வேன்” என அவர் தெரிவித்திருப்பது, அவரிடம் மேலும் ஒரு சட்டவிரோத ஆயுதம் இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சட்டத்தரணி உமாகரன் இராசையா கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பில் தமிழகத்தில் கண்டனப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, இந்தியாவின் இறையாண்மைக்கும் இது சவாலாக அமைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவைப் பாதுகாக்க சபாநாயகர் உடனடியாக தலையிட்டு அர்ச்சுனாவின் உரையை சபைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அவரை நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இவ்வாறானவர்களுக்கு விசா வழங்குவதை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.