இலங்கைக்கான விமான சேவை தொடர்பில் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட தகவல்!
சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் என அழைக்கப்படும் நாட்டின் தேசிய விமான நிறுவனமான சவுதியா மிக விரைவில் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சவூதி அரேபிய இராச்சியத்தின் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் பின் அலிபிரஹிம் அறிவித்துள்ளார்.
சவூதி அமைச்சர் பைசல் பின் அலிப்ராஹிம் இந்த அறிவிப்பு, இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது, இலங்கைக்கு செல்வந்தர்களான சவூதி பயணிகளின் கணிசமான சந்தையை கைப்பற்றுவதற்கு பங்களிக்கும் என்பதை கவனத்தில் கொண்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 நவம்பர் 26-27 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த சவூதி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியைச் சந்தித்தார்.
இதன்போது, சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பரந்த அளவிலான ஒத்துழைப்பை உள்ளடக்கிய பொருளாதார வரைபடத்தை உருவாக்குவது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.