எம்.பி. சமிந்த விஜேசிறி மேன்முறையீடு
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையை இரத்து செய்து விடுதலை செய்யுமாறு கோரி பதுளை மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.
அத்துடன் இந்த மேன்முறையீட்டை, மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறும், வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு வெளியாகும் வரை தனக்கு பிணை வழங்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

பொது வீதியை சட்டவிரோதமாக மறித்தது, இரண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்தியது மற்றும் அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளில் சமிந்த விஜேசிறி குற்றவாளி என பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்து, நேற்று செவ்வாய்க்கிழமை அவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.
2019ஆம் ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை, பொலிஸ் ஜீப் ஒன்று முந்திச் சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதன் பின்னரே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
. இந்தச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டதுடன், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது. விஜேசிறி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.