உலக சிரேஷ்ட மொடல் அழகன் போட்டியில் இலங்கையர் மகுடம் சூடினார்
சிங்கப்பூரில் நடைபெற்ற 2026 ஆண்டுக்கான உலக சிரேஷ்ட மொடல் அழகன் போட்டியில் 'எலைட்' பிரிவில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய கலாநிதி துமிந்த சில்வா, உலக அழகன் பட்டத்தை வென்ற முதல் இலங்கை மொடல் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி தாய்நாடு திரும்பியுள்ளார்.
சிங்கப்பூரில் செப்டெம்பர் 06 ஆம் திகதி முதல் 10 அம் திகதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகின் 22 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

மிஸ்டர் ஸ்ரீலங்கா
முக்கிய உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றது மட்டுமன்றி, போட்டியில் மேலும் சிறந்த ஆளுமை, சிறந்த முன்மாதிரி மொடல், சிறந்த நீச்சல் உடை அழகன் மற்றும் மிகவும் பிரபலமான போட்டியாளர் ஆகிய 04 முக்கிய உப பிரிவுகளிலும் துமிந்த சில்வா வெற்றி வாகை சூடியுள்ளார்.
முன்னதாக 'மிஸ்டர் ஸ்ரீலங்கா' பட்டத்தை வென்ற இவர், கலாநிதி பட்டம் பெற்ற உயர்கல்வியாளராகவும், ஒரு சட்டத்தரணியாகவும் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-309 விமானம் மூலம் நேற்று இரவு 9:35 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, அவரது நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன்புரி விரும்பிகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.