அநுர குமார திஸாநாயக்கவின் பிரான்ஸ் பயணம் திடீர் ரத்து
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இம்மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளவிருந்த பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் இந்தப் பயணம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இடம்பெறவிருந்த நிலையில், இலங்கையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன இதனை முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தன.
இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பிரெஞ்சு தூதரகத்தின் அறிவிப்புகளின்படி, பிரான்ஸ் பயணத்தின் முக்கிய நோக்கம் பிரெஞ்சு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய சர்வதேச பிரதிநிதிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறவிருந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், குறித்த தகவல்கள் வெளியில் வெளியாகியதையடுத்து, அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் புதிய கவனமும் அரசியல் விவாதங்களும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர், தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறான சந்திப்புகள் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்ற ஆலோசனைகளின் அடிப்படையில் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பிரான்ஸ் அமைச்சர் மற்றும் அந்நாட்டின் முன்னணி வர்த்தக நிறுவனங்களுடனான சந்திப்புகளும் இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவையும் தற்போது இடம்பெறாது என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயம் ரத்து செய்யப்பட்டதற்கான உத்தியோகபூர்வ காரணம் இதுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.