நாமலுடன் கைகுலுக்கல்: அரசியல் நகர்வுகள் தொடர்பில் அனுர விளக்கம்
தேர்தல் செயலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுடன் இடம்பெற்ற கைகுலுக்கல் சம்பவம் சாதாரண அரசியல் போக்கு என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவுடனான உரையாடல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசியல் நகர்வு
'நாங்கள் சிறப்பு அரசியல் நகர்வுகள் தொடர்பில் விவாதிக்கவில்லை. நலம் விசாரித்தேன்.
நான் நினைத்திருந்தால், அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் பொது நிதியைக் கொள்ளையடித்துள்ளனர் என்பதை நான் அவரது முகத்திற்கு நேராக கூறியிருக்க முடியும்.
கைகுலுக்கலுக்கும் எங்கள் கொள்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை ஒருவர் கைகுலுக்கினால் எழுந்து நின்று ஏற்றுக்கொள்வது சாதாரண மனித குணம்.
ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதியின் கைகுலுக்கலை மறுத்த சம்பவத்தை மக்கள் எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறீர்கள்.
அவர் எவ்வளவு கர்வமாக இருந்தார். நாங்கள் செய்தது சரிதான். கைகுலுக்க மறுப்பது தவறு". என்றார்.
கடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாசாவை நோக்கி கைகுலுக்க சென்றபோது அதனை அவர் மறுத்ததாக அரசியல் அரங்கங்களில் பேசப்பட்டது.
எனினும் நாமல் ராஜபக்ச அனுராவை சந்தித்தவுடன் எழுந்து கைகுலுக்கிய சம்பவம் அரசியலில் நோக்கத்தக்க ஒன்றாக மாறியது.