முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் அனுர அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!
உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக , ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களில் 14 வீடுகள் மாத்திரமே இதுவரை கையளிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர்களுக்கு 41 குடியிருப்புகள்
கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 41 குடியிருப்புகள் வழங்கப்பட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன் உத்தியோகப்பூர்வ இல்லங்களை உடனடியாக அவர்களிடம் ஒப்படைக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்தல் விடுத்திருந்தது.
எனினும் தற்போது 14 வீடுகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ள நிலையில் கையளிக்கத் தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.