ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்
ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று (8) திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்கள், சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பிரதிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகள், ஊழல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடர்வதில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதே இதன் நோக்கமாகும்.

அத்துடன் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் நிர்வாக நடவடிக்கைகள், மத்திய மின்னணு முறைமையொன்றின் ஊடாக சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களை சமர்ப்பிக்கும் செயல்முறையை மேலும் முறைமைப்படுத்தல் என்பனவும் அடங்குகின்றன.
இந்தத் திருத்தங்களின் மூலம் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கையில் காணப்படும் சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், ஊழல் எதிர்ப்புச் சட்டம் பயனுறுதியுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புக்கூறலுடனும் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதும் எதிர்பார்க்கப்படுகிறது.