கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல் ; ஒரே நேரத்தில் பல பகுதிகளுக்கு சிவப்பு அறிவிப்பு
கண்டி மாவட்டத்தில் தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் (NBRO) வெளியிடப்பட்ட மண்சரிவு அபாயத்திற்கான 'சிவப்பு எச்சரிக்கை' பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் ஒரே நேரத்தில் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டதால், எந்த இடத்தில் மக்களை மீள்குடியேற்றுவது என பிரதேச செயலாளர்களால் முடிவெடுக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

சிவப்பு அறிவிப்பு
இந்த அறிவிப்புகள் காரணமாக, கண்டி மக்கள் மாவட்டத்தை விட்டு வெளியேறி வேறு இடங்களில் குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் ஆகியோரின் இணைத் தலைமையில் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு நேற்று (08) கூடியது. இதன்போது, சிவப்பு எச்சரிக்கை தொடர்பாகப் பிரதேச செயலாளர்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் இந்த விடயத்தில் தனது இணக்கப்பாட்டைத் தெரிவித்தார்.
ஒரு பிரதேச செயலகப் பிரிவு முழுவதற்கும் சிவப்பு அறிவிப்பு வெளியிடுவதால், வீடுகள் சேதமடைந்து பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்ட மக்கள் மீள்குடியேற்றுவதில் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளதாகப் பிரதேச செயலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் பாதுகாப்பு மையங்கள் அமைந்துள்ள இடங்களின் பாதுகாப்பு குறித்துச் சந்தேகம் எழுவதாகவும், மண்சரிவு அபாயம் உள்ள இடங்கள் அல்லது பகுதிகளைத் தெளிவாகப் பெயரிட்டு அறிவிப்புகளை வெளியிடுமாறு தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்திடம் பிரதேச செயலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த தேசியக் கட்டட ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் காமினி ஜயதிஸ்ஸ, அதிக அபாயம் உள்ள இடங்களிலிருந்து 2,300 குடும்பங்களை வெளியேறும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் அபாய நிலையை முன்கூட்டியே அறிவிக்கும் நடைமுறை உலகெங்கிலும் இதே வடிவத்தில்தான் உள்ளது என்றும், இந்த அறிவிப்பு மாவட்டத்தின் அனைத்து மக்களையும் வெளியேறுமாறு கூறவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
இந்தநிலையில் மண்சரிவு அபாயம் உள்ள இடங்கள் அல்லது பகுதிகளைத் தெளிவாகப் பெயரிட்டு அறிவிக்குமாறு பிரதேச செயலாளர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.