எரிபொருள் விலை உயர்த்தாவிட்டால் மீண்டும் பொருளாதார நெருக்கடி? நிபுணர் எச்சரிக்கை
பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் டீசலின் விலையை சுமார் 600 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மே 6ஆம் திகதிக்கான தரவுகளின்படி, பெற்றோல் விலையும் குறைந்தது 20 முதல் 30 ரூபாய் வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாமல் இருப்பது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தால், அதன் தாக்கமாக எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்றும், இதே சுழற்சிதான் கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எரிபொருள் விலை உயர்வு பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், விலையை உயர்த்தாமல் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவது இன்னும் மோசமான விளைவுகளை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, எரிபொருள் விலையை அதிகரிக்கும் போது சமூக மானிய திட்டம் அவசியம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தனநாத் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.
குறிப்பாக, பொதுப் போக்குவரத்து மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களை அடிப்படையாகக் கொண்டு டீசல் மானியம் வழங்கப்பட வேண்டும் என்றும், பொதுவான மானிய முறைமைகள் பெரும்பாலும் தேவையற்றவர்களுக்கே பயனளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.