விமல் வீரவன்ச மீது பாயும் நடவடிக்கை!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில், நீதிமன்ற உத்தரவு தொடர்பாக விமல் வீரவன்ச ஆற்றிய உரை குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
குறித்த உரையில், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தின் இலக்கம் 01 இல், வழக்கு இலக்கம் 73294/01/2026 இன் கீழ் முன்னிலைப்படுத்தப்பட்ட நான்காவது சந்தேகநபரை கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு விமர்சிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க போதரகம, பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது, குறித்த உரையை ஒளிபரப்பிய ஏழு தொலைக்காட்சி அலைவரிசைகளிடமிருந்து திருத்தப்படாத காணொளிப் பதிவுகள் பெறப்பட்டதுடன், கூட்ட ஏற்பாட்டாளர்கள், அறிவிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
விசாரணைக் குறிப்புகள், வாக்குமூலங்களின் காணொளிப் பதிவுகள் மற்றும் சான்றுகளின் சுருக்கம் அடங்கிய மேலதிக அறிக்கை கொழும்பு இலக்கம் 02 நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது நிறுவனத்தை அவமதித்தல் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, விமல் வீரவன்சவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு வழக்கு நீதிமன்றப் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.